Friday, 18 November 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (பதிவு-1)


(கி.பி.1540-இல் விஜயநகரப் பேரரசு)
(தமிழகத்தில் இராயவேலூர் முதல் இராஜபளையம் வரை, கோயம்புத்தூர் முதல் கோடியக்கரை வரை நிலவுடைமையும் வணிகமும் கணிசமான அளவில் தெலுங்கு பேசும் ஆதிக்க சாதியினர் வசமானது எப்படி? தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோயில்கள் தெலுங்குப் பார்ப்பனர்கள் வசமானது எப்படி? இன்றும் தமிழகத்தின் ஆட்சி/அதிகாரத்தில் பெரும் பங்கினைத் தெலுங்கினத்தவர் பெற்றிருப்பது எப்படி? தமிழிசை தெலுங்கிசையாகத் திரிந்து, தமிழிசை வளர்த்த காவிரிக்கரை தெலுங்கிசையின் தொட்டிலானது எப்படி? தமிழில் பெருநூல்கள் எழுந்த காலம் மறைந்து சிற்றிலக்கியங்களே எழும் சூழல் ஆனது எப்படி?அதே காலத்தில் இதே தமிழகத்தில் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் பெருநூல்கள் எழுந்தது எப்படி? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்ட சோழர்களையும் பாண்டியர்களையும் மட்டும் வருணாசிரமவாதிகளென ஆய்வுரை வழங்கும் திராவிட இயக்கச் சார்பான அறிவுஜீவிகள், நடப்புக் காலத்திற்கு மிக நெருக்கமான ஆங்கிலேயர் காலம் வரை ஆண்ட நாயக்கர்களின் ஆட்சிமுறையின் வருணாசிரம நடைமுறைகள் பற்றி ஏன் பேசுவதில்லை? அவர்களது நிலவுடைமை மற்றும் வரிவசூல் முறை எப்படிப்பட்டவை? பாளையப்பட்டு முறை என்பது என்ன?

இதற்கெல்லாம் கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதல், முழுமையாக ஆங்கிலேயர் ஆட்சிக்கு உள்ளான 19-ஆம் நூற்றாண்டு வரை அரசர்களாகவும் பாளையக்காரர்களாகவும் இருந்து தமிழகத்தை ஆண்ட நாயக்கர்களின் வரலாற்றை அணுகவும் அறியவும் வேண்டியது அவசியம். அதற்கான ஒரு முயற்சியாக இத்தொடர்...
)



"விஜயநகரப் பேரரசு ஆட்சியைத் தொடங்கிய காலம் முதல், ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கும் காலம் வரையிலன காலம், தமிழரல்லாத இந்தியர்கள் - தமிழரல்லாத அந்நியர்கள் ஆண்ட காலம், தமிழர்கள் ஒற்றுமையில்லாமல் தங்களுக்குள் வெறுப்பு ஊஞ்சலை ஆட்டிவிட்டுப் பிறரை ஊஞ்சலில் வைத்து ஆட்டி, ஓகோவென்று புகழ்ந்து அந்நியர் ஆட்சிக்கு ஆலவட்டம் சுற்றிப் பல்லக்குத் தூக்கிய காலம்" என்பர் பேரா. ந.க.மங்களம் முருகேசன் மற்றும் இராஜம் ஆகியோர். இன்று வரையிலும் கூட அதுவே தொடர்கிறது என்பதே உண்மை.

விஜய நகரப் பேரரசு

கி.பி.1336-இல் முதலாம் ஹரிஹரரும் முதலாம் புக்கரும் குரு வித்யாரண்யரின் துணையோடு விஜய நகரப் பேரரசை நிறுவினார்கள் என்பதைப் பள்ளிப் பாடநூல்களில் படித்திருப்போம். (இன்று கருநாடக மாநிலத்தில் பெல்லாரியிலிருந்து 56 கி.மீ. தொலைவிலும், ஹாஸ்பெட் இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் சிதைந்த நிலையில் இருக்கிறது விஜயநகரம்.) விஜயநகரத்தைச் சங்கமர், சாளுவர், துளுவர், ரவீட்டார் ஆகிய நான்கு மரபினர் ஆட்சி புரிந்தனர். சாளுவரும் ஆரவீட்டாரும் தெலுங்கையும், சங்கமரும் துளுவரும் கன்னடத்தையும் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பர். எனவே கன்னடமும்  தெலுங்கும் பேரரசின் ஆட்சி மொழிகளாக இருந்தன.

இராஜ நாராயணச் சம்புவராயன்

இக்காலத்தே தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர் (கி.பி.1339-1363) இராஜ நாராயணச் சம்புவராயன் என்பவர். சம்புவராயர்களின் அரசிற்குப் படைவீடு ராச்சியம் என்று பெயர். இராஜ நாராயணச் சம்புவராயனின் தலைநகரம் வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம். இன்றைய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் அடங்கியது படைவீடு ராச்சியம். இவர்களது முன்னோர் திண்டிவனப் பகுதியில் (கிடங்கில்) இருந்த ஓய்மா நாட்டிலிருந்து வந்தவர்கள். சங்க இலக்கிய நூலும், பத்துப்பாட்டில் ஒன்றுமான சிறுபாணாற்றுப்படை ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் மீது இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது என்பதைப் படித்திருக்கலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட படையாட்சிகள் எனப்படும் வன்னிய குல சத்திரிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் சம்புவராயர்கள்.
குமார கம்பணன்

சங்கம மரபினரான முதலாம் புக்கரின் மகன் குமார கம்பணனே தமிழகத்தைக் கைப்பற்றி விஜய நகரப் பேரரசிற்கு உட்படுத்தியவர். இவரது மனைவியான கங்கா தேவி எழுதிய மதுரா விஜயம் (வீர கம்பராய சரித்திரம்) என்ற சமஸ்கிருதக் காப்பியம் குமார கம்பணனின் தமிழகப் படையெடுப்பை விளக்குகிறது. இவர் பலிஜா நாயுடு வகுப்பினர். கி.பி.1362 நவம்பர் மாதத்தில் இராஜ நாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றி அவரை விஜயநகரப் பேரரசிற்கு அடங்கி ஆட்சி புரியுமாறு செய்தார் குமார கம்பணன். அடுத்த சில ஆண்டுகளில் தஞ்சையை ஒய்சளர்களிடமிருந்தும், மதுரையைச் சுல்தான் அலாவுதீன் சிக்கந்தரிடமிருந்தும் (கி.பி.1377) கைப்பற்றி தமிழகம் முழுவதையும் விஜயநகரப் பேரரசிற்கு உட்படுத்தினார். மாநில ஆளுநர் பதவியான மகாமண்டலேசுவரராகவும் ஆனார்.

மகா மண்டலேசுவரரும் நாயக்கரும்

விஜயநகர  அரசின் இலச்சி​னை
மகாமண்டலேசுவரர் தண்டநாயகர் எனப்படுவார். குறைந்த மதிப்புள்ள காசுகளை இவர் வெளியிடமுடியும். சட்டம்-ஒழுங்கு நிருவாகப் பொறுப்பும் வரிவிதிப்பு-வரித்தள்ளுபடி செய்வதற்கான உரிமையும் இவருக்கு உண்டு. இவர் அரசின் நேரடிப் பிரதிநிதி. பேரரசருக்குத் திறை செலுத்தத் தேவையில்லை. மகா மண்டலேசுவரர்கள் பேரரசரால் இடமாற்றம் செய்யப்படுவர்.

விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள். (இது தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வந்த தனிநபருக்கு உரிமையுள்ளதும் தத்தம் இரத்த உறவுகளுக்குள் மட்டுமே பரிமாற்றம் செய்துகொள்ளத் தக்கதுமான காணியாட்சி முறைமைக்கு முற்றிலும் மாறுபட்டது.) விஜயநகர அரசர்கள் தமக்கு நம்பிக்கையான படைத்தலைவர்களுக்கு நிலங்களை வழங்கினர். இவ்விதம் பெற்றவர்களே அமர நாயக்கர்கள். அமர நாயக்கர் என்பதற்கு ஆயிரம் காலட்படைத் தலைவர் என்பது பொருள். இவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையினை ஆண்டுதோறும் அரசருக்கு வழங்க வேண்டும் இதுவே திறை. மட்டுமின்றி போர்க்காலங்களில் நாயக்கர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள காலட்படை, குதிரைப்படை , யானைகள் முதலானவற்றை அரசருக்கு அளிக்கவேண்டும். நாயக்கர்கள் இடமாற்றம் செய்யப்படுவதில்லை.

முற்றிலும் நிலமானிய முறையிலும் இராணுவ முறையிலும் அமைந்திருந்த இவ்வரசுமுறை கிராமக் குடியாட்சிக்கு எவ்வகையிலும் ஏற்றதல்ல.

பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்திலேயே மகாமண்டலேசுவரருக்குப் பதிலாக நாயக்கர் முறை தோன்றியது.

No comments:

Post a Comment