இதையொப்பத் தென்னிந்திய அரசர்களின் மீது ஸ்மார்த்த அத்வைத (சங்கர) மடங்களின் செல்வாக்கு கால்கொண்டது எப்படி?
விஜயநகரப் பேரரசும் சங்கர மடமும்
தில்லி துக்ளக் மரபின் முதல் சுல்தானாகிய கியாஸ்-உத்-தீன் மகனும் அடுத்த சுல்தானுமான உலூக் கான் (முகம்மது-பின்-துக்ளக்) படைகளால் பெல்லாரி கம்பிலி அரசன் வீழ்த்தப்பட்டதும், அவ்வரசனின் கீழ் பணிபுரிந்து வந்த ஹரிஹர சகோதரர்கள் தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இஸ்லாமியராக மதம் மாறி துக்ளக் மேலாட்சிக்குக் கட்டுப்பட்டு ஆள்வதாக உறுதியளித்து பெல்லாரி திரும்பி அதன் ஆளுநரானார் முதலாம் ஹரிஹரர்.
ஹரிஹரர் - புக்கர் தம் மாகாண எல்லைக்கு உட்பட்ட துங்கபத்திரை நதிக்கரையில் வித்தியாரண்யரைச் சந்தித்தனர். அவர் ஆலோசனையின் பேரில் இந்து மதம் திரும்பி, சுற்றியிருந்த சிறு சிறு இந்து அரசர்களின் ஒத்துழைப்போடு கி.பி.1336-இல் விஜயநகரை நிர்மாணித்தனர்.
![]() |
| வித்யாரண்யருடன் ஹரிஹரர், புக்கர் |
இவரது சகோதரர் சாயணர் வேதார்த்தப் பிரகாசிகை
என்ற பெயரில் வேதங்களுக்கு விரிவுரை எழுதினார். பல அத்வைத, சமற்கிருத
இலக்கண நூலாசிரியர் சாயணர். முதல் மூன்று விஜயநகர ராயர்களுக்கு
அமைச்சராகவும் இருந்தார்.
தலைக்கோட்டைப் போரை அடுத்து விஜயநகர அரசு ஆந்திரத்திலுள்ள பெனுகொண்டாவிற்கு நகர்ந்ததை அடுத்து, அருகிலுள்ள புஷ்பகிரியில் (தற்பொழுது கடப்பா மாவட்டம்)அத்வைத சங்கர மடக்கிளை நிறுவப்பட்டது.
கிருஷ்ண தேவராயரின் தம்பியும் துளுவ மரபின் நான்காவது பேரரசருமான அச்சுதராயரது மனைவியின் தங்கையை மணந்த தஞ்சை செவ்வப்ப நாயக்கரது விருப்பத்திற்கிணங்க கும்பகோணத்திலும் சங்கரமடக் கிளை வந்தது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகர அரசின் இறுதிக்கால அரசர்கள் வடாற்காட்டு (இராய)வேலூரிலிருந்த ஆண்ட காலத்தில் கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரத்தில் கிளைவிட்டது சங்கரமடம்.
ஆதிசங்கரர் கேரளத்தில் பிறந்தவர் எனினும் அவரது குருநாதர் ஆந்திரரான கோவிந்த பாதர். சங்கரர் நிறுவிய அத்வைத மடங்கள் நான்கு - வடக்கே பத்ரிநாதம்; மேற்கே துவாரகை; கிழக்கே பூரிஜகந்நாதம்; தெற்கே சிருங்கேரி. அவரது காலமான கி.பி.8-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வைதீக நெறி சைவ - வைணவ நெறிகளின் தொடர்புடனே இருந்தது. பாசுபத சைவம் மட்டுமின்றி காஷ்மீர சைவமும் சோழர் காலத்தில் செல்வாக்குப் பெற்றது. இவை பெரிதும் ஆகம வயப்பட்டவை; வருணாசிரமத்தைக் கொண்டாடுவனவல்ல. பிற்காலச் சோழர் ஆட்சியிலும், பாண்டியர் ஆட்சியிலும் பல பார்ப்பனர்களைப் படைத்தலைவர்களாகப் - அநிருத்தப் பிரம்மராயர், கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர், அருண்மொழியான மும்முடிச் சோழப் பிரம்மாதிராயர்,...எனப் - பார்க்கிறோம். வேள்வி இயற்றும் வைதீகர்களையும் பார்க்கிறோம். ஆனால் அத்வைத வைதீகர்களைக் காண்பதில்லை. மெய்கண்டதேவர் சித்தாந்த சைவம் வகுத்ததும், இராமானுஜர் விசிஷ்டாத்வைத வைணவம் வகுத்ததும் பிற்கால குலோத்துங்கர்கள் ஆட்சிக்காலத்தவை. நெறிகள் தத்துவ அடிப்படை கொண்ட சமயங்களாக இறுகிய காலம் அது.
தமிழ்ப் பார்ப்பனக் குலங்களில் பலவும் (ஐயர் பிரிவில் பல) சங்கர அத்வைதத்தை ஏற்றுக் கொண்டது விஜயநகர ஆட்சிக் காலத்திலேயே நேர்ந்திருக்கிறது. ஆட்சியதிகார நெருக்கத்தோடு தமிழகம் வந்த ஸ்மார்த்த அத்வைதத் தெலுங்குப் பார்ப்பனர்களைக் கண்டும், பின்பற்றியும் ஸ்மார்த்த அத்வைதத்தை உள்வாங்கிய வீதத்தின் அளவிலேயே அவற்றுக்கிடையிலான உயர்வு தாழ்வும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விஜயநகர ராயர் ஆட்சியிலோ, நாயக்கர் அரசுகளிலோ தமிழ்ப் பார்ப்பனர்கள் எவரும் அமைச்சர்களாகவோ, படைத்தலைவர்களாகவோ இருந்ததில்லை. தெலுங்குப் பார்ப்பனர்களே ஆதிக்கம் பெற்றிருந்தனர். சிருங்கேரியில் மட்டுமல்ல; காஞ்சியில் உள்ள சங்கர மடத்தின் பீடாதிபதிகளாய்க் கூட இன்று வரை தெலுங்கு /கன்னடப் பார்ப்பனர்களே வருவதும், அதே ஸ்மார்த்த அத்வைதத்தை ஏற்றுக்கொண்ட பிரிவிலுள்ள தமிழ்ப் பார்ப்பனர்கள் வரவியலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்களான அம்பட்டர்கள் எனும் ஆமாத்தியப் பார்ப்பனர்கள்
அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக இருந்த திருவாதவூரர் எனப்படும் மாணிக்கவாசகரைத் தெரியாத தமிழர் இலர். இவர் ஆமாத்திய குல அந்தணர் எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு.
'வைத்தியர் ஆயுள்வேதியர் மருத்துவர்
ஆரியர் கடகர் ஆமாத்தியரே'
என்று வைத்தியரைக் குறிப்பிடும் சொற்களை வரிசைப் படுத்தும் அபிதான மணிமாலை என்ற நிகண்டு (செய்யுள் -235).
'ஆயவளம் பதியதனின் ஆமாத்தியரில் அருமறையின்
தூய சிவாகம நெறியின் துறை விளங்க... '
வந்தவர் மணிவாசகர் என்று கூறும் திருவிளையாடற் புராணம் (வாதவூரருக்கு உபதேசித்த படலம்-செய்யுள்4).
'மன்னுமிந் நகரிதன்னுள் மானமங்கலத்தார் ஆகுந்
தொன்னெறி முனிவராம் ஆமாத்தியர் தொழுகுலத்து
நன்னெறி விடையிற் போந்தார் நண்கணத் தலைவர் நாமம்
மின்னெறி வாதவூரர் என்றுவந் துதயஞ் செய்தார்'
என்று கூறும் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (ஞானோபதேசம்-செ.6.)
இதே குலத்தைச் சேர்ந்தவரெனக் குறிப்பிடப்படும் புகழ்பெற்ற மற்றொருவர் பெரியபுராணம் சுட்டும் சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்சோதியார். பல்லவப் பேரரசன் முதலாம் நரசிம்மவர்மனுக்காகப் படைநடத்தி வாதாபி வென்றவர். இவர் காலம் கி.பி.7-ஆம் நூற்றாண்டு. இவர் கொணர்ந்த வாதாபி கணபதி இவரது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடி (குடந்தை-நாகை மார்க்கத்தில் திருமருகல் அருகே) சிவன் கோயிலில் உள்ளது.
'ஆயுர்வேதக் கலையும் அலகில் வடநூற் கலையும்
தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயிற்று... '
விளங்கியவர் பரஞ்சோதியார் என்று கூறும் பெரிய புராணம் (சிறுத்தொண்டர்-செய்யுள்3).
'மாமாத்திரரே பிடகர் மருத்துவர் ஆயுள்வேதியர்க் கபிதானம்மே' என்று ஆயுள்வேதியரை குறிப்படும் சொற்களைக் கூறும் பிங்கல நிகண்டு (செய்யுள் 784).
கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் சடையவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் காலத்தில் அமாத்தியராக (அமாத்தியர்-அமைச்சர்) இருந்தவர் மாறன் காரி. மதுரகவியார் எனப்படுபவர் இவர். பராந்தகன் ஆணைக்கிணங்க வேள்விக்குடிச் செப்பேடுகளை வெட்டுவித்தவர் இவர் (வைத்ய சிகாமணி மாறன் காரி) என்று அச்செப்பேடும் கூறும் . ஆமாத்திய குல அந்தணரான இவர் மூவேந்த மங்கலப் பேரரையன் எனும் பட்டம் பெற்றவர். மதுரையை அடுத்த ஆனைமலைப் பெருமாள் கோவில் இவர் கட்டுவித்தது. அதில் நரசிம்மர் திருமேனியை நிறுவியவரும் இவரே.
இதே பாண்டியன் காலத்துச் சீவரமங்கலம் செப்பேட்டில் ஆணத்தியாகக் (தலைமைச் செயலாளர்) குறிப்பிடப்படுபவன் வாத்ய கேய சங்கீதங்களால் மலிவெய்திய வைத்திய குலத்தவனான தீரதரன் மூர்த்தி எயினன் என்கிற வீர மங்கலப் பேரரையன் ஆவான். இவ்விருவரையன்றி சங்கரன் ஸ்ரீதரன், சாத்தன் கணபதி முதலான பலரும் இக்காலத்தில் மங்கலப் பேரரரையன் பட்டம் பெற்ற அரசியல் தலைவர்களாக இருந்திருக்கின்றனர்.
வாத்ய கேய சங்கீதமென்பது வாத்திய மற்றும் வாய்ப்பாட்டு இசை. மங்கலப் பேரரையன் என்பது அரசியல் தலைவர்களாக இருந்த ஆமாத்திய குல அந்தணர்களில் சிலருக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்டமாகும்.
'சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து அம்பட்டன் உத்தமசோழனான இராஜசோழ பிரயோகத்தரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் இவ்வூர்ச் சல்லியக் கிரியை' என்று கி.பி.1016-ஆம் ஆண்டைச் சேர்ந்த திருவிசலூர்க் கல்வெட்டு (தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 23 ஏ.ஆர்.350 ப.241) வைத்திய குலத்தாருக்கு வழங்கப்பட்ட நிலத்தைக் குறிப்பிடுகிறது. பிரயோகத்தரையன் என்றால் அறுவைச் சிகிச்சை நிபுணன் என்று பொருள். அம்பட்டன் எனும் சொல்லுக்கு (அம்+பட்டன்) உயர்ந்த அந்தணன் என்றே பொருள். மங்கலம் என்ற பெயரில் வைத்திய குலத்தாரும் நிலம் பெற்றிருப்பதை இது காட்டுகிறது. மேலும் மங்கலியன் (பிங்கலநிகண்டு-804), மங்கலி (அபிதான மணிமாலை-336) என்ற பெயர்கள் இவர்களுக்குரியன என நிகண்டுகள் குறிக்கின்றன. மங்கலச் சமூகம் என்ற பெயர் இன்றும் இவர்களைக் குறித்து நிற்கிறது.
இவற்றைக் காண, பல்லவர் காலம் முதல் பிற்காலப் பாண்டியர் காலம் வரை ஆயுர்வேதக் கலையும், வடநூற் கலையும், இசைக் கலையும் கற்றுப் படைக்கலத் தொழிலும், அமைச்சர் பணியும் புரிந்து அந்தணர்களாக வைத்திய குலத்தார் இருந்தது தெரிகிறது. இன்றும் இக் குலத்தார் ( பண்டிதர், மருத்துவர், நாவிதர், மங்கலர் ) இசையிலும் மருத்துவத்திலும் திறன் மிக்கவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பிற்காலப் பாண்டியப் பேரரசுக்குப் பின் விஜயநகரப் பேரரசே தமிழகத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதல் நிலைபெற்றது என்பது கருதத்தக்கது. அதன் பின்னர் இச்சமூகம் குறித்து உயர்வான பதிவுகள் இல்லை. கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை மதிப்புடன் நோக்கப்பட்ட ஒரு சமூகம் அடுத்த ஆட்சிக்காலத்தே தாழ்ந்ததென வீழ்த்தப்பட்டதற்கான சமூக / அரசியல் காரணங்கள் தனியே ஆராயத் தக்கது.
[நாயக்கர் காலத்தே வீழ்த்தப்பட்ட ஒரு பெருங்குலம் நாடார் / கிராமணி எனப்படும் சான்றோர் குலமாகும். மதுரை நாயக்கர் ஆட்சிக் கால வரலாற்றில் அதைக் காண்போம்.]
1. பாண்டியர் வரலாறு / தி.சு.சதாசிவப் பண்டாரத்தார் / மணிவாசகர் பதிப்பகம்.
2. மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாறு / நந்தர் (எ) தங்கம் விசுவநாதன்/ நந்தினி பதிப்பகம்.
3. www.en.wikipedia.org
4. http://www.sishri.org/
5 . பிங்கல நிகண்டு / பதிப்பாசிரியர்: சு.இலம்போதரன் / கமலகுகன் பதிப்பகம்.
6 . அபிதான மணிமாலை / பதிப்பாசிரியர்: சு.பாலசாரநாதன் / உ. வே.சா. நூல் நிலையம்.

No comments:
Post a Comment